எங்களைப்பற்றி

வரலாறு

அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயம்

தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் மறைந்து போன வரலாற்று உண்மைகள்

அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ தரவைப் பிள்ளையார் ஆலயம் என்பது கலாசார சமூக விழுமியங்களை பேணுவதிலும் சைவநெறி சார்ந்த பாரம்பரிய கலாச்சார சமூக வாழ்விலும் சமய அனுஸ்டானங்களில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றது.

மட்டக்களப்பு – பொத்துவில் பிரதான வீதியில் மட்டக்களப்பு மாநகரத்துக்கு தெற்கே 41 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

கல்முனை மாநகரில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசத்தின் தென்பகுதியில் தரவைச் சித்தி விநாயகர் ஆலயம் எழுச்சியோடு காட்சியளிக்கிறது. ஆலயத்தின் கிழக்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வங்கக்கடல் உள்ளது. மேற்கே பரந்து விரிந்த கரைவாகுப்பற்று எனப்படும் நெற்செய்கைப் பிரதேசம் உள்ளது. வடக்கே 300 மீற்றர் தொலைவில் கல்முனை நகர் உள்ளது.

தெற்கே கல்முனைக்குடி என்னும் முஸ்லிம் கிராமம் உள்ளது. கல்முனை தெற்கே 2 கிலோமீற்றர் தொலைவில் நான்கு பெரும் கோயில்களைக் கொண்ட சாய்ந்தமருது என்னும் தமிழ் கிராமம் இருந்தது. தற்போது இந்த தமிழ் கிராமம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாக மாறி இருக்கிறது.
அதற்கு அடுத்ததாக இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மற்றுமொரு தமிழ் கிராமம் காரைதீவு என்ற இடமாகும். ஆலயத்தின் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர்.

ஆலயத்தின் வரலாற்றுக்காலம்

ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமையானது என இந்த ஆலய பணிகளிலே தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த காசிநாதன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய 400 ஆண்டுகளிற்கு முன் தற்போது பிரதான வீதியாக விளங்கும் பிரதேசம், அன்று நீர் வளம் பொருந்திய செழிப்பான நிலப்பகுதியை உள்ளடக்கியிருந்தது.
செழிப்பான இந்த பிரதேசத்தை மையமாக வைத்து, தமிழ் மக்கள் அப்பகுதியில் வதிவிடங்களை அமைத்து,பள்ளம் பார்த்து பயிர்செய்து மழை நீரை சேமித்து வைத்து பாசன வசதிக்காய் குளங்களை அமைத்து அருகாமையில் உள்ள காடுகளை அழித்து வயல் நிலங்களாக்கி செல்வச் செழிப்பாய் வாழ்ந்து வந்தனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியில் மத்தியில் குளக்கரையின் ஓரமாக மணல் திட்டியும் மறுபுறம் ஆழமான குளத்தில் அல்லி மலர்களும் தாமரை மலர்களும் கண்கொள்ளா காட்சியாக காணப்பட்டன.

இந்தக் காலப்பகுதியில் வேளாண்மை செய்வதற்காக வயலுக்கு செல்லும் விவசாயிகள், ஆதிகாலத்தில் வழிபாட்டிற்குரியதாக பிள்ளையார் வடிவிலான கருங்கல்லே காணப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.இதனை குளத்தின் தரவையில் இருந்த வம்மி மரத்து அடியில் வைத்து விவசாயிகளும் ஊர் மக்களும் வழிபட்டு வந்தனர்.

விவசாயிகள் வேலையை முடித்து வீடு திரும்பும் போது தாங்கள் வழிபட்டு வந்த பிள்ளையார் வடிவிலான கல்லை காணாது மனவேதனையுடன் சென்றனர் .

யாரோ விஷமிகள் விநாயகர் வடிவிலான கல்லை குளத்தினுள் வீசி எறிந்துள்ளனர். என்றாலும், மறுநாள் காலையில் விநாயகர் வடிவிலான அந்த கல்லானது வம்மி மரத்தடியில் வீற்றிருந்தது விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுத்தது. இவ்வாறான பக்தியை தூண்டும் இச்சம்பவம் தினந்தோறும் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

கோயிலின் வளர்ச்சி

பிள்ளையார் வடிவிலான கல்லிற்கு ஏதோ அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்த இந்தப் பிரதேசத்து மக்கள் அருகில் இருந்த மணல்மேட்டில் பச்சை இலைகளினால் பந்தல் இட்டு வணங்கினார்கள். இந்தக் கல் தரவையில் கண்டெடுக்கப்பட்டதனால் இந்த ஆலயத்துக்கு தரவை பிள்ளையார் என பெயர் சூட்டி வணங்கி வந்தனர்.

இப்பிரதேசத்தில் தோன்றிய முதல் வணக்க ஸ்தலமாகையால் அயல் கிராமத்து மக்களும் மாட்டு வண்டி மூலமாகவும் நடையாகவும் யாத்திரை செய்து வணங்கி வந்தனர். தரவைப் பிள்ளையார் மீது நம்பிக்கை கொண்டு அருள் பெற்ற மக்கள்,கோயில் ஒன்று கட்டவேண்டும் எனும் அவா ஏற்பட்டு, வைரமான மரங்களைக்கொண்டு எம் பெருமானுக்கு கோயில் கட்டி வணங்கி வந்தனர்.

இந்தத் தரவை சித்தி விநாயகரானது, கண்டி மன்னன் செனரத் கி.பி 1604-1638 ஆட்சி காலத்தில் பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இவ் ஆலயம் நிலைபெற்றுள்ளது. இக் காலத்தை அறுதியிட்டு கூறமுடியாவிட்டாலும், 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஆலயமாக திகழ்கிறது என்பதை வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது

மட்டக்களப்பு பிரதேசமும் கல்முனை பிரதேசமும் கண்டி இராச்சியத்தின் கீழ் இருந்த காலத்தின் இக் கோயிலை பராமரிப்பதற்காக கண்டி மன்னர்களால் நெற் காணிகள் வழங்கப்பட்டு (சான்றாவளி கண்டம்) வாழ்வாதாரத்துக்கு வழி வகுக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வளவு தொண்மையையும் சிறப்பையும் இந்த ஆலயம் காட்டி நிற்கிறது.

கண்டி மன்னன் செனரத் ஆட்சி காலத்தில் கண்டி மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தின்போது, அம் மன்னன் கிழக்கு மாகாணத்தில் தமிழர் வாழ்ந்த இடங்களில் முஸ்லிம்களை குடியேற்றினார் என்பது என்பது வரலாறு.

அக்காலத்துக்கு முன்னரே கல்முனையில் தமிழரும் அவர் வழிபாட்டு தலங்களும் குறிப்பாக தரவைசித்தி விநாயகர் ஆலயமும் நிலைபெற்று இருந்ததை வரலாற்று ஆவணங்கள் சான்றுரை படுத்துகின்றன.

அழிந்து போன வரலாற்று உண்மைகள்

1986.12.13 திகதி அன்று உடைத்து அழிக்கப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயிலில் ஒரு வித்தியாசமான அமைப்பு காணப்பட்டது.

இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தோடு அதற்கு முன்பாக மூஷிகமும் பலிபீடமும் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து எட்டு அழகிய முதிரை மரங்களைக் கொண்ட இரண்டு மண்டபங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன..இந்த பழைமையான கோயில் மூலஸ்தான அறையும் பலிபீட மண்டபமும் கட்ட பட்ட பின்னரே இரண்டு மண்டபமும் கட்டப்பட்டுள்ளதாக வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது. இக் கோயிலின் கருவறையின் கதவு நிலைகள் கருங்கல்லினால் அமைக்கப்பட்டு இருந்தது சிறப்பம்சமாகும்..

( இவற்றின் விளக்கமான வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது )

கோயிலின் தன்மை

இக் கோயில் சொறிக்கல் எனப்படும் கிறவல் கல்லும் தேனும் சுண்ணாம்பும் கலந்து பெரிய செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது.

இதன் கூரை முதிரை திருக்கொன்றை போன்ற மரங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்பட்டது. இந்த ஆலயத்தின் கூரை சல்லி ஓட்டினால் வேயப்பட்டிருந்தது. கூரையின் மேல் மூன்று பெரிய கலசங்கள் இருந்தன.

மூன்றாவது பெரிய மண்டபத்தில் அழகிய நான்கு முதிரை தூண்களும். கருங்காலி மரத்தினால் அழகிய கடைச்சல் வேலைப்பாடுகளுடன் கூடிய இரண்டு யன்னல்களும் காணப்பட்டன. முன்னால் அமைந்திருந்த பிரதான கதவு நிலைகள் முதிரை மரத்தில் கருங்காலி பதித்து அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்பட்டன. முன் பிரதான மண்டபமும் மாட அமைப்பைக்கொண்ட அரைச்சுவர் திறந்தவெளி மண்டபமும் காணப்படுகிறது. இந்த மண்டபத்தில் நாகதாளி கடைச்சல் அமைப்பைக்கொண்ட மரத்தினால் ஆன நான்கு துண்கள் காணப்பட்டன. இதன் உள் மண்டப அறை சாணமும் களிமண்ணும் கலந்து மெழுகியது போல் பூசி இருக்கும்.

சிதறு தேங்காய் உடைக்கும் கல்

நான்கு அடி அகலம் கொண்ட பெரிய தட்டையான கல் இந்த ஆலயத்தின் முன்னால் காணப்பட்டது. இந்த கல் நமது ஊரில் யானைக்காரர் என்று அழைக்கப்படும் கணபதிபிள்ளை அவர்களின் தந்தையிடம் ஒரு யானை இருந்ததாகவும் கோயில் தேங்காய் உடைக்கும் கல் அவர்களினால் கொண்டுவரப்பட்டது என்று ஊர் மக்கள் ஆவணத்தோடு கூறுகின்றார்கள்.

கோயில் வீதிக்கு முன்னால் உள்ள தாழையடி குளத்தில் யானை குளிப்பாட்டும் பள்ளம் இருந்தது. தற்போது அந்த பள்ளம் அழிந்துவிட்டது. கோயிலின் பிரதான வீதிக்கு முன்னால் தெற்குப்பக்கமாக மடத்துடன் கூடிய, கோயிலுக்கு சொந்தமான காணி ஒன்று உள்ளது. இம் மடம் பொதுமடமாக இருந்தது. கதிர்காமம் செல்லும் பாதயாத்திரியர்களுக்கு தங்குமிடமாக பயன்பட்டது. இந்த இடம் இப்போதும், மடத்து வளவு என அழைக்கப்படுகின்றது.

மண்டுர் முருகன் ஆலயத்திற்கு நேர்த்திக் கடன் செலுத்தும் அடியார்கள் காவடி உடனும் வாய் அலகுடனும் காரைதீவு, சாய்ந்தமருது ஆகிய தமிழ் கிராமங்களில் இருந்து காவடி எடுத்து வந்து தரவைசித்தி விநாயகர் ஆலயத்தில் தங்கி, இளைப்பாறி அவர்களுக்கு இளநீர் கொடுத்து, பின்னர் ஆலயத்தின் குளக்கட்டு வழியாக கிட்டங்கியை அடைந்து தோணிகள், வள்ளங்கள் மூலம் மண்டூர் முருகன் ஆலயத்திற்கு யாத்திரை செல்வது காலம் காலமாக நடந்து வருகின்ற பக்திபூர்வமான நிகழ்வாகும்.

தற்பொழுதும் மண்டூர் முருகன் திருவிழாவின் போது,காரைதீவில் இருந்து பாதயாத்திரையாக செல்கின்றனர். இதனால் மண்டூர் ஆலயத்திற்கும் தரவைப்பிள்ளையார் ஆலயத்திற்கும் தொடர்புள்ளது. இன வன்முறையின் போது காடையர்களால் அழிக்கப்பட்ட பழைய ஆலயத்தின் முன் மண்டப மரத்தூண்களும் கதவு நிலைகளும் மண்டூர் ஆலயத்தின் முன் மண்டப கதவு நிலைகளை போன்று ஒரே கலைவடிவில் வேலைப்பாடுகளுடன் காணப்பட்டது. கருங்கல்லினால் செதுக்கப்பட்ட இந்த ஆலயத்தின் உடைந்த கருங்கல் தூண்கள் கோயிலினுள் தற்போதும் காணப்படுகின்றன.

இந்த ஆலயத்துக்கு முன்னால்,கிழக்குப் பக்கமாக நேரெதிரே உள்ள வீதி, தரவைக் கோயில் வீதியென பெயரிடப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வந்த பிரதேசம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தரவை சித்தி விநாயகர் ஆலயம் அமையப்பெற்ற கிழக்கு கரையோரப் பகுதி கடந்த காலங்களில் பல இயற்கை அழிவுகளுக்கு உள்ளானது. இந்த அனர்த்தங்களின் போது பல உயிர்களும் காவு கொள்ளப்பட்ட வரலாறு இருக்கின்றன.

குறிப்பாக 1907 சூறாவளி, 1915 ஏற்பட்ட சூறாவளி,1957இல் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் 1978 இல் வீசிய சூறாவளி போன்ற இயற்கை அணர்த்தங்களில் கோயிலுக்கும் அது சார்ந்த கட்டங்களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.இது சகலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

மக்களின் வாழ்வியல் அம்சங்களோடு இரண்டற கலந்து உள்ள இந்த ஆலயம், நாட்டின் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட இன வன்முறைகளினால் தரைமட்டமாக்கப்பட்டது.

1986.12.13ம் திகதி இந்த வன்முறை திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டது என்பது தெட்டத் தெளிவாகியது.

இதன் பின்னர் ஊர் மக்களால் கட்டி எழுப்பப்பட்டு இருக்கின்ற இந்த ஆலயமே இப்போது எழுச்சி பூர்வமாக காணப்படுகின்றது.
( வரலாறு தொடரும்….. )

வரலாறு

கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம்

இந்து சமயம் பல வழிபாட்டு முறைகளைக் தன்னகத்தே கொண்டது.இவ் வழிபாட்டு முறைகள் எல்லாம் மனிதனின் படிமுறை வளர்ச்சியால் காலத்திற்கு காலம் தோற்றம் பெற்றவை.இவற்றில் ஒரு பகுதி வழிபாட்டு முறைதான் பெண் தெய்வ வழிபாடாகும்.குறிப்பாக கிழக்கிலங்கை மக்களிடையே வழக்கில் உள்ள சைவம் பழைய மரபைச் சார்ந்தது.இவர்கள் கடைப்பிடிக்கும் சடங்கு முறையான வணக்கம் மிகப் பழமையானது.ஆலயங்கள் தோன்றும் முன்னரே சடங்கு முறையான வழிபாடு தமிழர்களிடையே தோன்றிவிட்டது. காலப்போக்கில் ஆலயங்கள் ஆகம முறைப்படி நிரந்தரமாக அமையப் பெற்றாலும் கூட தற்போதும் சடங்கு முறைகளே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு காலம் காலமாக வணங்கப்பட்டு வரும் காளி, துர்க்கை,மாரி,பேச்சி முதலிய பெண் தெய்வ வரிசையில் இறுதியாக வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகியாகும்.கண்ணகி தமிழர்களிடையே ஒரு புதுத் தெய்வமாக உருப்பெற்ற கதையை ‘சிலப்பதிகாரம்’ நயம்படக் கூறுகின்றது.

மாசாத்துவான் என்ற பெரும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த கண்ணகி,அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெரும் வணிகனான கோவலனைத் திருமணம் செய்கிறாள்.அவள் தனது திருமண ஆடம்பர வாழ்க்கையில்  மாதவியின் நடன அரங்கேற்றம் ஒன்றுக்கு கோவலனுடன் செல்கின்றாள்.அங்கே மாதவியின் தாய் தனது மகள் அணிந்திருக்கும் பூமாலைக்கு யார் கூடிய விலை கொடுத்து வாங்குகின்றார்களோஅவருக்கே மாதவியும் சொந்தமாவாள் என்ற நிபந்தனையை விதிக்கின்றாள்.மாதவி இனி தனக்கு மட்டுமே ஆட வேண்டுமென்ற நிபந்தனையை கோவலன் விதிக்கின்றான்.மாதவியோடு இனிதே வாழ்ந்து வந்தான்.

மாதவி கோவலனின் நிபந்தனையை மீறி இந்திர விழாவொன்றில் பகிரங்கமாக நடனமாடிய தால் கோவலன் அவளை விட்டுப் பிரிந்தான்.மீண்டும் புது வாழ்வு வாழ்வதற்காக மதுரைக்கு கண்ணகியிடம் வருகிறான்.மதுரையிலே பாண்டிமாதேவியின் சிலம்பைக் களவெடுத்தவனாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்படுகின்றான்.இதனைக் கேள்வியுற்ற கண்ணகி ஆவேசம் கொண்டு சூரியனைப் பார்த்து எனது கணவன் கள்வனா?எனக் கேட்ட போது அசரீரியாக ‘கள்ளனல்லன் உன் கணவன் ஒள்ளெரி உண்ணும் இவ்வூர்’ என்ற வார்த்தையைக் கேட்டு மற்றச் சிறப்புடன் சென்று பாண்டிய மன்னனோடுவழக்காடி நீதியை நிலைநாட்டி மாள்கிறாள்.
சிலப்பதிகாரத்தைப் பாடிய இளங்கோ அடிகள் குறிப்பிடுகையில் ‘அரசியல் விழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் போற்றுதலும் ஊழ்வினை மீண்டும் வந்து உறுத்துமென்பதும்’ அந்த வகையில் சிலப்பதிகாரக் காப்பியம் அரசியலில் தவறு செய்த பாண்டிய மன்னனை அறக் கடவுள் தண்டித்ததாகவும் கண்ணகி கோவலனுக்காகவே கற்பு வெறியோடு வாழ்ந்து தனது கற்பின் சக்தியால் நீதியை நிலைநாட்டி மதுரையை எரித்து கோவலனை உயிர்ப்பித்தாள். கோவலன் விசாரணையின்றி இவ்வாறு கொலை செய்யப்பட்டமைக்குக் காரணம் முற்பிறப்பிலேஅவன் அவ்வாறானதொரு தவறைப் செய்திருந்ததாகவும் சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகின்றது.

செங்குட்டுவ மன்னன் சேர நாட்டில் கண்ணகி வழிபாட்டுக்கு ஆலயம் அமைத்து விழாவெடுத்தான்.அதில் அனுராதபுரியைத் தலைநகரமாகக் கொண்டு (கி.பி 2)ஆட்சி புரிந்த கஜபாகு மன்னனும் கலந்து கொண்டான்.கண்ணகியைத் தனது குல தெய்வமாக ஏற்ற கஜபாகு மன்னன் இலங்கை திரும்பியதும்,பல கண்ணகி ஆலயங்களைக் கட்டுவித்து நித்திய பூசை நடத்தி விழா எடுக்கும் படி கட்டளையிட்டான்.அதன் பிற்பாடே கண்ணகி வழிபாடு இலங்கையில் பரவியது.

இலங்கையில் ஏனைய பகுதிகளை விட கிழக்கிலங்கையிலேயே கண்ணகி வழிபாடு நிறைந்து காணப்படுகின்றது.வடக்கே வாகரை தொடக்கம் தெற்கே பாணமை வரை வரலாற்று சிறப்புமிக்க பல கண்ணகி அம்மன் ஆலயங்கள் இருப்பதும் இதற்கு எடுத்துக்காட்டாகும். இந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் கரையோரத் தலைநகரமான கல்முனை மாநகரில் இயற்கை எழில் பொங்கும் வங்கக் கடலருகே எழுந்தருளியிருக்கும் கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வைகாசித் திங்கள் கதவு திறந்தவுடன் வழமை போன்று இம்முறையும் 13.05.2024 ஆம் திகதி ஆரம்பமாகியது.
‘முத்தமிழ் வடித்த சாற்றை முழங்கிடும் சிலம்பாய்த் தந்த இத்தரை வியக்கும் கற்பின் ஏந்திழை கண்ணகித் தாய் சித்திரை வடிவம் பூண்டு கல்முனைச் சிகரமானாள்.

பத்தினித் தாயைப் போற்றி பணிந்து நாமிறைஞ்சுவோமே!’
கிழக்கின் பாரம்பரியங்களில் ஒன்று கண்ணகி அம்மன் ஆலயங்களை நிருவகிப்பதற்கென ஆலய பரிபாலன சபை ஒன்றும் மரபு வழியாக கூடவே இருந்து வருகின்ற மையமாகும். இதில் எட்டுப் பேர் அங்கம் வகிப்பர். இவர்களை ‘வண்ணக்கர்’ என்று அழைப்பர். ஊரவரால் குடிவழிக்கு ஒருவரென்ற  ரீதியில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும் ஓர் சிறப்பம்சமாகும். இவ்வாறு மரபு வழியாகக் தெரிவாகும் நிருவாக அமைப்பே இன்றும் கல்முனை கடற்கரை அம்மன் ஆலயத்தில் இருந்து வருகிறது.ஆலய உற்சவ காலத்தில் பல்வேறு பாரம்பரியங்களுடன் திருக்கதவு திறத்தலுடன் தினமும் ஒரு குடிப்பூசை நடைபெறும். அன்றைய ஆலய நிகழ்வுகளுக்கு அக்குடி சார்ந்த வர்ணக்   கரும் மக்களுமே பொறுப்பாக இருந்து செயற்படுவர். ஆரம்ப நாளான திருக்கதவு திறத்தல் திருவிழா கொடிமரச்சுத்தி குடியினராலும் 2ம், 3ம், 4ம் திருவிழாக்கள் முறையே பத்தநாச்சிக்குடி, கருப்பட்டிநாச்சிக்குடி, பாலாப்பணிக்கர் குடியினாலும்,5ம் நாள் ஊர்வலத் திருவிழா மூக்கறச்சிக் குடியினாலும் 6ம் நாள் திருவிழாவானது கலியாணக்கால் வெட்டுதல், கலியாணக்கால் அலங்காரப் பூசை ஆகியன வேலாப்பணிக்கன் குடியினராலும் செய்யப்படும்.7ம்,8ம் நாள் திருவிழாக்கள் கழுவத்தன்பணிக்குடி, கறுத்தக்கண்ணிக்குடி ஆகியவற்றால் பிரதி வருடமும் முறைமாற்று அடிப்படையில் செய்யப்படும்.


7ம் திருவிழாவானது விநாயகப் பானை வீதிவலம் வரல்,வட்டுக்குற்றுதல் இடம்பெறுவதுடன் கண்ணகி வழக்குரை பாராயணம் நிறைவு பெறும். எட்டாம் நாள் இறுதித் தினத்தன்று திருக்குளிர்த்தி தினமாகும்.இது  கோவலன் கொலையுண்ட செய்தியால் கோபாவேசம் கொண்ட கண்ணகியின் வெம்மையைத் தணிக்கும் நோக்கில் திருக்குளிர்த்தி நீராட்டு நிகழ்ச்சியும்,திருக்குளிர்த்திப் பாடல்களும் இடம்பெற்று நிறைவாக திருத்தவும் அடைக்கப்படும்.


கடந்த காலங்களைப் போன்று இவ்வருடமும் இவ்வாலய உற்சவம் அதிசிறப்பாக எட்டுத் தினங்கள் நடைபெறவிருப்பதானது இம்மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டுக்கே கிடைத்துள்ள நற்பேறு களில் ஒன்றே எனலாம்.

கே.திருநாவுக்கரசு.
கல்முனை-02

நாங்கள் உதவ இங்கே இருக்கிறோம். எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள், நாங்கள் மகிழ்ச்சியுடன் பேசுவோம்.

Scroll to Top